Archives: மார்ச் 2019

என்னுடைய தந்தையை நினைக்கின்றேன்

நான் என் தந்தையைக் குறித்து நினைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு சிறந்த வெளிவேலையைச் செய்பவராக, எப்போதும்; சுத்தியலைக் கொண்டும், தோட்ட வேலையிலும், மிகச்சிறந்த கருவிகளும், சிறிய இயந்திரங்களையும் கொண்ட அறையிலிருந்து வேலை செய்வதும் தான் என் நினைவில் வருகிறது. அவருடைய கரங்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையையோ, திட்டத்தையோ செய்துகொண்டேயிருக்கும். சில வேளைகளில் ஒர் கார் நிறுத்தும் அறையை செய்துகொண்டிருப்பார். அல்லது ஒரு சிறிய மேசையைச் செய்வார், அல்லது பறவைக்கான ஒரு வீட்டை தயாரிப்பார். சில வேளைகளில் பூட்டுகளைச் சரி செய்வார், சிறிய ஆபரணங்களை வடிவமைப்பார், கண்ணாடியில் சித்திரவேலை செய்வார்.

என்னுடைய தந்தையைக் குறித்து நினைக்கும்போது, அது என்னை என்னுடைய பரலோகத் தந்தையும், படைப்பாளருமானவரை நினைக்கச் செய்கின்றது. அவரும் தன்னுடைய வேலையில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். ஆரம்பத்தில் 'தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்தினார்... அதற்கு அளவு குறித்தார்... அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" (யோபு 38:4-7) அவருடைய படைப்புகளெல்லாம் ஒரு கலைநயமிக்க வேலை, மிகக் சிறந்த வேலை. நம்மை பிரமிக்கச் செய்யும் அழகிய உலகினை அவர் படைத்தார். 'அது மிகவும் நன்றாயிருந்தது" (ஆதி. 1:31) என்று சொன்னார்.

அவருடைய அழகிய கலைப் படைப்புகளில் நீயும் நானும் உண்டு. தேவன் நம்மை மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் படைத்தார் (சங். 139:13-16). அவர் நமக்குப் பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். அவருடைய சாயலை நமக்குத் தந்து, நமக்குள்ளே இலக்கினையும், அதனை நிறைவேற்றும்படி வேலைசெய்யும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளார். அதில் இப்புவியையும் அதிலுள்ள படைப்புகளையும் ஆள்வதும் பாதுகாப்பதும் அடங்கும் (ஆதி. 1:26-28,2:15). நாம் எத்தகைய வேலை செய்தாலும் நம்முடைய வேலையிலோ, அல்லது ஓய்வுவேளையிலோ அவருக்காக முழு மனதோடு வேலைசெய்ய நமக்குத் திறமையையும் ஆற்றலையும் தருகின்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனைப் பிரியப்படுத்தும்படி செய்வோமாக.

தூசியோ அல்லது வேறெதுவோ

மிகவும் புத்திசாலியான வின்னி, அடிக்கடி சொல்வது, 'நீ பேசிக் கொண்டிருக்கும் நபர், உன் பேச்சைக் கவனிக்கவில்லையெனில், பொறுமையாயிரு. ஒருவேளை, ஏதோவொரு தூசு அல்லது துகள் அவனுடைய காதை அடைத்துக் கொண்டிருக்கலாம்."

பல ஆண்டுகளில் வின்னியிடமிருந்து நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ கூறுவது அவர்களுக்கு பயனுள்ளதாகயிருந்தாலும் அதை அவர்கள் கவனித்துக் கேட்க வில்லையெனில் ஏதோ ஒன்று அவர்களைக் கேட்கவிடாமல் தடுக்கின்றது. ஒரு சிறிய துகள் அவர்கள் காதுகளை அடைக்கின்றது அல்லது வேறொரு காரணமும் இருக்கலாம். சிலருக்கு கவனிப்பதென்பது இயலாததாகிவிடுகின்றது. ஏனெனில், அவர்கள்; தங்கள் பிரச்சனைகளால் உடைந்து, வலுவிழந்து காணப்படுகின்றனர்.

இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுகின்றார். ஆனால், அவர்கள் கவனிக்கவில்லை. ஏனெனில், அவர்களின் ஆவி சோர்வடைந்து காணப்படுகின்றது. அவர்களின் வாழ்வு கடினமாயிருக்கிறது (யாத். 6:9). இஸ்ரவேலர் எகிப்தில் தங்கள் ஜீவன் கசந்து போகுமட்டும் அடிமைத்தனத்தில் கஷ்டங்களைச் சகித்தனர். இந்த கஷ்டங்களின் பலனால் சோர்வடைந்தனர். அதனாலேயே இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரைக்குச் செவிகொடுக்கவில்லை. மோசேயின் கரிசனையையும் புரிந்துகொள்ளலையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. அதனால் இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரையை நிராகரித்தனர் என்றும் சொல்ல முடியாது.

நாம் கூறுவதை பிறர் கவனிக்காவிடில் நாம் என்ன செய்ய வேண்டும்? அறிவாளியான வின்னியின் வார்த்தைகள் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். 'பொறுமையாயிரு" தேவன் சொல்வதென்னவெனில், 'அன்பு, நீடிய சாந்தமும் பொறுமையுள்ளது" (1 கொரி. 13:4). அது பொறுமையாய் காத்திருக்கும். தேவன் தன்னுடைய வேலையை அத்தோடு முடித்துவிடவில்லை. அவர்களுடைய துயரத்தில் நம்முடைய அன்பினாலும், ஜெபத்தினாலும் கிரியை செய்கின்றார். அவருடைய வேளை வரும்போது அவர்கள் கேட்கும்படி தேவன் அவர்களின் செவிகளைத் திறப்பார். அதுவரை பொறுமையாயிரு.

ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது

என்னுடைய சிநேகிதியும் அவளுடைய பேரக் குழந்தைகளும் நானும் ஒரு சிறிய நடை பயிற்சிக்குச் சென்றோம். அவள் குழந்தையின் தள்ளுவண்டியைத் தள்ளியபடியே நடந்தாள். தன்னுடைய நடைகளெல்லாம் வீணாகின்றன என்றாள். ஏனெனில், தான் கையில் அணிந்திருக்கும் கணிப்பானில் இவை எண்ணப்படுவதில்லை. தான் கைகளை விசி நடக்கவில்லையாதலால், அவை எண்ணப்படுவதில்லை என்றாள். ஆனால், இந்த நடைகளெல்லாம் அவளுடைய உடல் சுகாதாரத்திற்கு உதவுமே என்றேன். 'ஆம்" என்று பதிலளித்து, சிரித்தாள். 'ஆனால், நான் அந்த எலக்ட்ரானிக் கருவியில் தங்க நட்சத்திரம் பெற விரும்புகிறேன்" என்றாள்.

அவளுடைய எண்ணத்தை நான் புரிந்துகொண்டேன்! ஆனால், நாம் ஏதோ ஒன்றினைக் செய்யும்போது அதற்கான விளைவு உடனடியாகக் கிடைக்காவிடில், அது நம் இருதயத்தைச் சோர்வடையச் செய்யும். ஆனாலும் பலாபலன்கள் எப்பொழுதும், உடனடியாகக் கிடைப்பதில்லையே அல்லது உடனடியாகத் தெரிவதில்லையே.

அப்படியானால், நாம் செய்யும் நல்ல காரியங்கள், அதாவது ஒரு நண்பனுக்கு உதவுவது, அல்லது அறியாத ஒருவரிடம் கனிவாக நடந்துகொள்ளல் போன்றவை பயனற்றது என நினைக்கத் தோன்றுமல்லவா! கலாத்தியாவிலுள்ள சபைக்கு பவுல் விளக்கும் போது, 'மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலா. 6:7) என்கின்றார். எனவே நாம், 'நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக் நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (வச. 9). நன்மை செய்வது மட்டும் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழியல்ல. நாம் அறுவடை செய்வது இவ்வுலகிலோ அல்லது பரலோகத்திலோ என்பதைக் குறித்து வேதாகமம் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், நாம் உறுதியாக சொல்லலாம், 'நாம் ஓர் ஆசீர்வாதத்தை அறுவடை செய்வோம்" (வச. 9).

நன்மை செய்வது கடினம் தான். ஏனெனில், அதற்கான பலனை நாம் எப்பொழுது அறுவடை செய்வோம் என்பது தெரியாது. ஆனால், என்னுடைய சிநேகிதி நடப்பதால் உடல் வலிமையைப் பெற்றுக்கொள்ள முடிவதால் நாமும் நன்மையானவற்றை தொடர்ந்து செய்வோம். ஏனெனில், ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது.

ஆவியில் பாடுங்கள்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வெல்ஷ் எழுப்புதல் கூட்டங்களின் போது, தான் கண்டவற்றை வேத போதகரும் எழுத்தாளருமான பு. கேம்ப்பெல் மோர்கன் எழுதுகின்றார். தேவனைப் போற்றும் பாடல்களின் அலை ஓசையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலும் தேவப் பிரசன்னமும் இருந்ததை நம்புகின்றார். அந்தக் கூட்டங்களில் இசையின் மூலம் அனைவரையும் ஒருமுகப்படுத்தி, சிலரைத் தானாக ஜெபிக்கவும், பாவ அறிக்கை பண்ணவும், தானாகப் பாடவும் ஊக்குவித்ததை மோர்கன் கண்டதாக எழுதுகின்றார். யாராகிலும் அங்கு தங்களுடைய உணர்வுகளால் உந்தப்பட்டு நீண்ட நேரம் ஜெபித்தாலோ அல்லது மற்றவர்களோடு இசைந்திராமல் பேசினாலோ மற்றொருவர் மெல்லிய குரலில் பாட ஆரம்பிக்கின்றார். மற்றவர்கள் அப்பாடலோடு இணைந்துகொள்கின்றனர். மற்றவர்கள் அப்பாடலின் பல்லவி வரும்போது உரத்த குரலில் பாட ஆரம்பிக்கின்றனர். மற்ற சப்தங்களெல்லாம் அதில் அமிழ்ந்து விடுகின்றது.

மோர்கன் விளக்குகின்ற, இத்தகைய பாடல் மூலம் துதித்தலை வேதாகமத்திலும் காண்கின்றோம். அங்கும் இசை முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியைக் கொண்டாட இசை பயன்பட்டது (யாத். 15:1-21). ஆலய பிரதிஷ்டையின் போது தேவனை ஆராதிக்கவும்

(2 நாளா. 5:12-14), இராணுவத்தின் யுத்த முறைகளில் ஒரு பகுதியாகவும் (20:21-23) இசை பயன்படுத்தப்பட்டது. வேதாகமத்தின் மையத்திலுள்ள புத்தகமான சங்கீதம் பாடல்களால் நிறைந்த புத்தகம் (சங். 1-150). புதிய ஏற்பாட்டில், பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதங்களிலும் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை விளக்குகின்றார். 'ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம்பண்ணுங்கள்" என்கின்றார் (எபே. 5:18-19).

போராட்டங்களிலும், ஆராதனையிலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் விசுவாசத்தின் பாடல்கள் ஒருமனத்தைக் கொண்டுவர உதவுகின்றன. பழைய புதிய வகை இசையின் மூலம் நாம் மேலும் மேலும் புதுப்பிக்கப்படுகின்றோம். வல்லமையாலும், அதிகாரத்தாலுமல்ல, ஆவியினாலும் தேவனைப் போற்றும் பாடல்களாலுமே இது நடக்கின்றது.

மேகங்களால் மறைக்கப்பட்டது

மிக அபூர்வமான நிலவின் காட்சி, நவம்பர் மாதம் 2016ல் தெரிந்தது. நிலா தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று பூமிக்கு மிக அருகில் வந்ததால் அது மிகப் பெரியதாகவும் மிகப் பிரகாசமானதாகவும் தோன்றியது. கடந்த அறுபது ஆண்டுகளுக்குப்பின் காணக் கிடைத்த ஓர் அரிய காட்சி. ஆனால், நான் இக்காட்சியைக் கரிய மேகங்களால் சூழப்பட்டதால் வானத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், வேறு இடங்களிலிருந்து இக்காட்சியைக் கண்ட என்னுடைய நண்பர்களின் புகைப்படங்கள் மூலம் கண்டு கொண்டேன். நான் வானத்தை உற்று நோக்கினேன். மேகங்களுக்குப் பின்னால் இந்த மிகப் பெரிய நிலா இருக்கின்றது என்பதை நான் நம்பவேண்டியதாயிற்று.

கொரிந்து பட்டணத்தின் சபைகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது அவர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தின் மத்தியில் காணப்படாத நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையை விடாதிருக்கக் கேட்கின்றார். மேலும் 'அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" எனக் கூறுகின்றார் (2 கொரி. 4:17). எனவே அவர்கள் தங்கள் கண்களை, ''காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கித்" திருப்புமாறும் ''காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்" (வச. 18) எனவும் கூறுகின்றார். கொரிந்து சபையினரின் விசுவாசம் வளர வேண்டுமென பவுல் வாஞ்சிக்கின்றார். அவர்கள் துயரத்தை அநுபவிப்பதால். தேவன் மீது நம்பிக்கையோடிருக்க விரும்புகின்றார். அவர்களால் தேவனைக் காண முடியாவிட்டாலும் தேவன் அவர்களை நாளுக்கு நாள் புதிதாக்குகின்றதை நம்பும்படி கேட்கின்றார் (வச. 16).

நான் அன்று அந்த மேகங்களினூடே பார்த்தபோது காணப்படாத ஒரு பெரிய நிலாவை எப்படி நம்பினேனோ, அப்படியே தேவன் காணப்படாதவராகவும் ஆனால் நித்தியமானவராகவும் இருக்கின்றார். தேவன் என்னை விட்டு மிக தூரத்தில் இருக்கின்றார் என்று நான் நினைக்கத் தோன்றும்போதெல்லாம் நான் என் கண்களை காணப்படாத நித்தியமானவைகளின் மீது வைத்துக் கொள்வேன்.